தீர்க்கதரிசி

நுண்கதை

மருத்துவமனையின் ஐசியூ வாசலில் நானும் அம்மாவும்  அமர்ந்திருந்தோம். உள்ளே பத்து நபர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். எங்களுடன் அருவமாகக் காலனும் காத்திருந்தான். அன்றைய தினத்தின் பாசக்கயிர் வீச்சு யாருக்கென்று அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

உட்புறத்திலிருந்து அழைப்பு வந்தது. நுழைந்தோம். கதவுக்கு  நேராக முதற்படுக்கையில் அப்பா படுத்திருந்தார். உடனிருந்தவனுக்கு எளிதாக்கியிருந்தார்கள்.

கைகளில் சிரைவழிச் சொட்டுநீர் செலுத்த வகையில்லாமல் கால்களில் இணைத்திருந்தனர். எதிர்பார்த்திருந்தவரின்  கண்களில் அன்று வரை இருந்த மங்கலான பார்வை மறைந்து ஒளி நிறைந்திருந்தது. எதையோ சொல்வதற்காக ஆக்ஸிஜன் மாஸ்க்கைக் கழற்றினார். தடுத்தேன். சலிப்புடன் புன்னகை புரிந்தவர், அவர்தம் மனையாளை நோக்கினார். என்னைச் சுட்டிக் காட்டியவர், தன் வயிற்றைத் தடவினார். பசியோ என்றெண்ணினேன். பிறப்புறுப்பைத் தொட்டுக்காட்டினார். கரங்கள் தெம்பிழந்து, கீழிறங்கின. அடுத்த ஒரு மணி நேரத்தில் கூற்றுவன் வென்றிருந்தான். ஆனால் தந்தை சொல்ல முயன்றது புரியவில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு வேறொரு அறையின் முன்பாக நின்றிருந்தேன். வெளிப்பட்டார் மருத்துவர். பச்சை நிறத் துணியால் சுற்றப்பட்ட பச்சிளங் குழந்தையை என்னிடம் கொடுத்தவர், “உங்களுக்கு மகன் பிறந்துள்ளான்,” என்றார்.

படங்கள் உதவி : ChatGPT