பழைய வீட்டை வாடகைக்குத் தர வேண்டும். பரணைச் சுத்தம் செய்தேன். மறைந்த பெற்றோரின் பெட்டிகள் இருந்தன. அப்பாவுடையதைத் திறக்கும் ஆர்வம் மேலிட்டது. மூடியை நீக்கினேன்.

இடப்பக்கம் முழுவதும் கோவில் ஆண்டுவிழாப் பத்திரிக்கைகள் வரிசைக்கிரமமாகக் காணப்பட்டன. எழுதப்படாத டைரிகள். சில பக்கங்களில் கொடுக்கல் வாங்கல் கணக்குகள். ஓரத்தில் அவரின் பேனாக்கள். ஒன்றை நெடு நாட்களாக உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். சிறிது குண்டானது. செப்பனிட்டால் இன்றும் பயன்படுத்தலாம். வேண்டாம், தவறவிட்டுவிடுவேன், அங்கேதான் பாதுகாப்பு.
தந்தையிடம் போராடிப் பெற்று, நான் சிதைத்த மவுத் ஆர்கன். எங்கோ போட்டிருக்கிறேன், தேடி எடுத்துச் சேகரித்துள்ளார். தடித்த நீண்ட பென்சில். கையாளுவது கடினம்.
மிதிவண்டிக்கான ‘பாஸ்’. அன்று அஃது இல்லாமல் ஓட்டக்கூடாது. ஏதேதோ புத்தகங்கள். ஆய்வகக்கருவிகள் அடங்கிய மரப்பேழை. அவற்றைக் கொண்டுதான் தவளைகளை அறுத்ததாகக் கூறுவார். ‘ரேடியோ லைசென்ஸ்’. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கும் ஐந்து தினங்களும் வானொலி முன்புதான் வாழ்க்கையே. “கரகொற” சத்தம் வந்ததும் யாருக்கோ தந்துவிட்டார். ஆராய்வதற்கு நிறையவே உள்ளன. அப்பேழையைச் சோதிக்கவும் நினைவுகளை மீட்டுணர்வதற்கும் காலங்கள் அதிகம் தேவை.