மந்திரவாதி

நுண்கதை

பள்ளியில் மாறுவேடப் போட்டி ஆரம்பித்திருந்தது. மதிய உணவிற்குப் பிறகு, இரட்டை வேப்பமரத்தினடியில்  தொடங்கியது. ராஜேஷ் பெண்ணாகவும் மல்லிகா ஆணாகவும் அலங்காரம் செய்திருந்தார்கள்.

கருப்பு வேட்டி கட்டி, உடம்பெல்லாம் சுண்ணாம்பால் கோடு போட்டுக்கொண்டு ஒருவன் வந்தான். கிழிந்த கோணிப்பைகளாலான ஜமுக்காளத்தை விரித்தான். பிணமெறியும்  நாற்றம் வீசியது. 

தலையில் நீண்ட ஜடாமுடி. முகத்தில் இடுப்பளவுக்குத் தொங்கும் தாடியும் மீசையும். நெற்றியில் பெரிய கருமை நிறப் பொட்டு. கக்கத்திலிருந்த பையிலிருந்து கைகால் எழும்புகளை வெளியிலெடுத்து வைத்தான். அடுத்து மண்டையோடு ஒன்று.

ஆசிரியரின் மகனல்லவா, எனக்கு முதல் வரிசையில் இடம். வயிற்றில் ஏதோ உருண்டது. சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றியது. “ஓம் ரீம் க்ரீம்” எனக் கத்திக்கொண்டு கபாலத்தைத் தட்டியதும் தீப்பற்றிக்கொண்டது. முதற்பரிசு அவனுக்கு, ஒரு வாரக் காய்ச்சல் அடியேனுக்கு.

நீண்டகாலம் கழித்துக் கல்லூரியொன்றில் மகளுக்காக நிற்கும் பொழுது யாரோ முதுகைத் தொடும் உணர்வு. அடையாளம் தெரியவில்லை. நான்தான்டா ‘மந்திரவாதி ரவி’ என்றான். பேசிவிட்டு வீடு திரும்பினேன். இரவு பெருத்த சந்தேகம். அன்று மாதிரியே  இன்றும் புருவத்திற்கு மையிட்டு இருந்தானோ?

படங்கள் உதவி: ChatGPT