திருடன்

நுண்கதை

அண்ணாச்சி கடையில் அதைப் பார்த்ததும் வாங்கியே ஆகவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டான். அம்மா வைக்கும் பொட்டின் நிறத்தில் இருந்தது அந்தக் கிரிக்கெட் பால். தங்க எழுத்துக்களால் அதன் மீது எழுதப்பட்டிருந்தது.

“ஏலே, என்னத்தப்  பாக்கற” என்ற கடைக்காரரிடம்,

“ஒண்ணுமில்ல” என்று கூறி நகர்ந்தான்.

இரவு முழுவதும் தூக்கமில்லை. அப்பாவிடம் கேட்டால் வாங்கிக்கொடுத்துவிடுவார். ஆனால் நிறையக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மறுநாள் பள்ளிக்குச் செல்லும்முன் அங்கே சென்றவன் உள்ளே யாரிருக்கிறார்கள் என எட்டிப்பார்த்தான். நல்வாய்ப்பாக இம்முறை கடைப்பையன் இருந்தான்.

“ஏனுங்ணா, அதென்ன வெலைங்?”

“எட்டு ருபாடா தம்பி”

கண்களை அகலத் திறந்தவன், டிரௌசர் பாக்கெட்டினுள் கைகளை விட்டுத் துழாவினான். இரண்டு நலணாக்கள் கிடைத்தன. காலதாமதமாகச் சென்றால் கணித ஆசிரியரிடம்  அடிவிழுமென்று கிளம்பினான்.

மாலை வீடு திரும்பியதும் சாமியறையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் வாவென்றழைத்தது. சாவியிருக்குமிடம் தெரியும். எட்டணாக்களாகத் தேடியவன் தேவையானதைச் சேர்த்தான். இரவே அப்பந்தைச் சொந்தமாக்கிகொண்டான்.

வார விடுமுறை. வேறொரு ஊரில் போட்டிக்கு அழைப்பிருந்தது. உற்சாகமாகப் பந்து வீச்சைத்  தொடங்கினான். சில ஓவர்கள் தாண்டியதும், எல்லைக்கோட்டைக் கடந்ததைச் சிறுவனொருவன் எடுத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தான்.

பட உதவி: ChatGPT