உலகப்பொதுமறை

நுண்கதை

வரிசையில் இன்னும் நான்கு நபர்கள் மட்டுமே பாக்கி. இரண்டு நாட்களாகக் குடித்த தண்ணீர் இப்பொழுது கசப்படித்தது. அவனிடமிருந்த உடைகளிலேயே சிறந்ததை அணிந்திருந்தான். சட்டையின் நைந்து போன அடிப்பகுதியை மறைக்கப் பேன்டினுள் செருகியிருந்தான்.

சினிமாதான் வாழ்க்கையென வந்தவனுக்குச் சில நாட்களாக ஆஞ்சநேயர்  உணவளித்துக்கொண்டிருந்தார். இன்று இயக்குனர் வரச்சொல்லியிருக்கிறார். எப்படியும் வாய்ப்புக் கிடைத்துவிடும் என்று ரமேஷ் கூறியிருந்தான்.

எட்டிப்பார்த்தான். வடையுடன் தயிர்சாதமும் கொடுக்கிறார்கள். டைரக்டர் ஆபிஸிற்குப்  போக, கையிலிருக்கும் காசில்  பாதி தூரம் பேருந்தில் செல்லலாம். பெண்ணாகப் பிறந்திருக்கலாம்.

“சீக்கிரம் வாங்க சாமி, நேரமாகுதல்ல. பின்னால நெறையப் பேர் நிக்கிறாங்க பாருங்க,” கொடுப்பவன் சீறினான்.

பிரசாதக்கடையின் அருகிலிருக்கும் இடமே நல்லது , யாரும் தொல்லை செய்யமாட்டார்கள். மனதில் சொல்லவேண்டிய கதை ஓடிக்கொண்டிருந்தது.

“ஏன்டா! இங்க பிச்சக்காரனெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கில்ல, எந்துருச்சுப் போடா.” எழுவதற்குள் கடைக்காரனின் குச்சி மணிக்கட்டைத் தாக்கியிருந்தது. வலியில் கரத்திலிருந்தது கீழே விழுந்தது. “தரித்திரம் புடுச்சவனே, ஒழுங்காச் சுத்தப்படுத்திட்டுப் போ”

மூலையில் படுத்திருந்த பூனை வேகமாக ஓடிவந்து அதனை நக்கத் தொடங்கியது.

பசியும் உலகப்பொதுமறை தானே.

பட உதவி: ChatGPT