பேனா

நுண்கதை

அப்பெண்ணின் கைகளில் இருந்த எழுதுகோல் என்னை ஈர்த்தது. மெலிந்த பச்சை வர்ண உடலுக்குத் தங்க மூடி போட்டிருந்தது.

வங்கியின் காசாளர் முகப்பை  நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் எனக்குமிடையே நான்கு பேர் நின்றிருந்தனர்.  எழுதக் கேட்பதற்குத் தயக்கம் தடுத்தது. இன்னும் இரண்டு நிமிடங்கள், அந்தப் பெண் வந்த வேலையை முடித்துக் கிளம்பிவிடுவாள்.

“ஏங்க மேடம்…”. எனது குரல் கேட்டிருக்குமா எனச்சந்தேகம் வந்தது. இளையவள், செவித்திறன் அதிகம் போலும், திரும்பினாள்.

“உங்க பேனாக் கிடைக்குமா? ஃபில் பண்ணனும்.”

“இந்தாங்க அங்கிள்”, முன்னால் நின்றிருந்தவன் அவனுடையதை நீட்டினான். என் பார்வையைப் புரிந்துகொண்டவள், புன்முறுவல் பூத்தவாறே எனக்குக் கொடுத்தாள். செல்பேசி அவளின் கவனத்தைத் திசை மாற்றியது.

வரிசையிலிருந்து நகர்ந்தேன். யாரும் கவனிக்கவில்லை. சட்டைப்பையில் செருகினேன். நம் காரியத்தைப் பிறகு பார்ப்போம் என்று புறப்பட்டேன். அங்கிருந்து வெளியேறியவன் தலையை நிமிர்த்தி நடந்தேன். சென்ற வாரம் என்னிடமிருந்து வாங்கியவள் திருப்பிக்கொடுக்கவே இல்லை.