
ஐம்பதாண்டு மணவாழ்க்கை முடிந்து அன்றோடு பதினேழு தினங்களாகியிருந்தன. கருமாதி நேற்றுதான் முடிந்தது. உடனிருந்த ஒருத்தியின் பிரிவு எவ்வளவு கொடூரமானது என்பதை மூன்றாம் நாளே பறைசாற்றியது.
நான் கொஞ்சம் கடினமானவன். காவல் ஆய்வாளர் பணி. குடும்பத்தில் குழந்தைகளையும், வெளிமனிதர்களையும் பிரித்தறியாதவன். மகன்களிடையே கண்டிப்புடனேயே வாழ்ந்தவன். இப்பொழுது இருவரும் மருமகள்களுடன் சேர்ந்து அடுத்து என்ன செய்வதெனத் திட்டமிட்டுக்கொண்டிருகிறார்கள். கண்கள் மங்கலானவுடன் காதுகளும் மந்தமாகி இருக்கலாம். கேட்டுத் தொலைத்துவிட்டேன். அவர்களுக்கு என்னை விட இந்த வீட்டின் மீது தான் நோக்கம்.
இன்று நடைப்பயிற்சிக்கு வரும்பொழுதே, எலித்தொல்லை அதிகமாக உள்ளது, எலிப்பொடி வேண்டுமென்று அண்ணாச்சி கடையில் சொல்லிவிட்டே புறப்பட்டேன். எனக்கென இனி யாரோ?
எதிரில் குறுக்கிட்டு நின்ற காரிலிருந்து இறங்கியவன், நெருக்கமாகப் பழகியவன் போல் நலம் விசாரித்தான். இதுவரை அறிமுகமில்லை. இதே பாதையில் வெகுகாலமாக நடப்பதைப் பார்த்திருக்கிறானாம். ஏன் இரண்டு வாரங்கள் காணவில்லையென வினவினான். விபரங்களைக் கூறினேன். முகம் மாறியது. மறைத்துக்கொண்டவன், “கவலைப்பாடாதீங்க சார், நாங்க பக்கத்துலதான் வசிக்கிறோம். கூப்பிட்டிங்கன உதவிக்கு உடனடியா வந்துருவோம்.” கைகொடுத்துக் கிளம்பிவிட்டான். போகும்போது எலிமருந்து வாங்கக்கூடாது.
பட உதவி: ChatGPT