இறகு

நுண்கதை

தந்தையும் அவனும் நடந்து கொண்டிருந்தார்கள். பாலத்தின் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பலூன் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தார். சிவந்த நிறம். உள்ளே நீல வர்ண விளக்கொன்று மிளிர்ந்தது.

தென்றலின் தாலாட்டிற்கு அசைந்தாடிக்கொண்டு வந்தது.

புள்ளினங்கள் வீடடையத் திரும்பிக்கொண்டிருந்தன. பருந்தொன்று ஆகாயத்தில் மிதந்துக்கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் கூட்டமாக வட்டமடித்துக்கொண்டிருந்தன.

அப்பாவிடம் அவற்றைக் காண்பித்தவன், “அதெல்லாம் என்ன பண்ணுது!”

“பறக்குது”

“எப்படி?”

கைகளை மேலும் கீழுமாக ஆட்டியவர், “அவைகளுக்கு சிறகுக இருக்கா. இப்படி அசைக்குதா, அதனாலதான்” என்றார்.

“அப்போ இதுக்கில்லியே, ஆனா?” கைகளிளிருந்ததை காட்டினான்.

“இதுக்குள்ள ஹீலியம் காஸ் ஃபில் பண்ணியிருக்காங்களா. அந்த வாயுதான் உயரமா தூக்கிட்டு போகுது”

திடீரென வீசிய பெருங்காற்று மித்ரனிடமிருந்து பலூனைப் பிடுங்கிச்சென்றது. மித்ரன் காற்றிடம், “சரி, நீயே வெச்சுக்கோ. எனக்கு வீட்டில ஒன்னு இருக்குது. ரெண்டு ரெக்க மட்டும் கொண்டு வந்து கொடுக்கிறியா. பறக்கவேமாட்டேங்குது”

பட உதவி: ChatGPT