மழை பெய்துகொண்டிருந்தது. செம்மண் நிலத்தில் விழும் நீர்த்துளிகள் தங்கள் நிறத்தை இழந்தன. ஜன்னலின் மீதமர்ந்து படித்துக்கொண்டிருந்த லதாவை நீர்க்குமிழிகள், “வா, வந்தெம்மை தொட்டு உடை” என்றழைப்பு விடுத்தன. மறுநாளையத் தேர்வு பயங்காட்டியது. மழைநீரில் விளையாடினால் உடல் நலம் கெடும், திட்டு கிடைக்கும். சமையலறையை நோக்கினாள். அம்மா உணவைத் தயாரிப்பதில் மும்மரமாக இருந்தாள்.
வாயிற்படியைத் தாண்டினாள். தரையில் தரம்பிய மஞ்சள் பாவாடையின் ஓரங்கள் சிவந்தன. தோளிலிருந்த தாவணியால் முக்காடிட்டுக்கொண்டாள். தண்ணீர் முகத்தை நனைத்தது. அவள் வைத்திருந்த திலகத்தை அழிக்க முயன்றது. ஆனால் ஸ்டிக்கர் பொட்டிடம் தோற்றது. மருதானியிட்டிருந்த பாதத்தில் முதல் மொக்குள் மகிழ்ச்சியாகத் தன்னுயிரை ஈந்தது. வரிசைகட்டி நின்றவை, ஒவ்வொன்றாகத் தாங்கள் பிறந்த பயனை அடைந்தன. மூக்கின் நுனியில் நின்ற துளி ஆட்டத்தைத் தடுத்தது. அதனைத் தன்னிரு கண்கள் நெருக்கிப் பார்க்க முயன்றாள்.

மாரி உருவாக்கிய சிற்றோடையில் மாவிலை ஒன்று மிதந்து வர, ஆசை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. காகிதப்படகு செய்து நீண்ட நாட்களாகியிருந்தன.
கல்லூரிக் கணித நோட்டிலிருந்த சூத்திரங்கள் நீரால் செம்மைப்பட்டுக்கொண்டிருந்தன..
பட உதவி: ChatGPT