
அறை நெடுகிலும் முடிக்கற்றைகள் சிதறியிருந்தன. டிவியின் திரை உடைந்திருந்தது. படுக்கையின் விரிப்புகள் சுருங்கி மூலையில் ஒதுங்கியிருந்தன. நிர்மலாவிற்கென்று தேர்ந்தெடுத்து வாங்கியவை அவை. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தவிர்ப்பதற்காக நகத்தைக் கடித்தான்.
இரண்டு நாட்களில் திருமணம். இதுவரை அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அன்றைய காலை நிகழ்வு, முழுவதையும் அடியோடு சிதைத்திருந்தது. வாழ்நாள் எதிரியுடன் சிரித்துப் பேசிக்கொண்டு வந்தவளைப் பார்த்ததும் நிலைகுழைந்தான். உடனிருந்தவன் தொட்டதிற்கு அவள் மறுக்கவில்லை.
மாலை வந்தவளிடம் விசாரித்ததில், ‘நீண்ட நாள் பழக்கம், உனக்காகவெல்லாம் விட முடியாது’ என்று கூறியதாக நினைவு. வாயிற்படியின் அருகில் சிகரெட் துண்டொன்று கிடந்தது. ராசுவிற்குப் புகைபிடிக்கும் வழக்கம் கிடையாது. இதற்குப் பிறகும் காத்திருப்பதில் பலனில்லை.
அலமாரியில் எப்பொழுதும் வைக்குமிடத்தில் கைத்துப்பாக்கியைக் காணவில்லை. அருகிலிருந்த புதுத்துணிகள் தரையில் விழுந்திருந்தன. கதவைச் சாத்த முயன்றான். கட்டிலின் பின்புறம் யாரோ இருப்பதாக அப்பொழுதுதான் கவனித்தான். நெருங்கியவன், ஒருவன் தலையில் குண்டடிபட்டு இறந்துகிடப்பதைக் கண்டான். அதிர்ச்சியில் திரும்பியவன் திகைத்தான். கண்ணாடியில் அவனைத் தவிர எல்லாம் தெரிந்தன.
பட உதவி: ChatGPT