யோகாசனம்

நுண்கதை

மலை நேர நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். தேர்வுக் காலம், பூங்காவில் குறைவான குழந்தைகளே விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுமி தனிப்பட்டுத் தெரிந்தாள். யோகக் கலைக்கான  விரிப்பின் மீது அவ்வித்தையைப் பயின்று வந்தாள். எனது வேகத்தைக் குறைத்து அக்காட்சியைப்  பார்த்தேன்.

குளக்கரையின் நீரலைக்கு அசையும் தாமரைத் தண்டைப் போல அவள் உடல் நெகிழ்ந்தது. நடனக்கலைஞரின் நாட்டியத்தை மறுபதிப்புச் செய்தன இடைவிடாது தொடர்ந்த  ஆசனங்கள். 

முதுகைப் பின்புறமாக வளைத்துத் தரையைத் தொட்டவிதம் வியக்கவைத்தது. அப்பேதையைச்  சுற்றியிருந்த  நான்கு பிள்ளைகளுக்குச் சர்க்கஸ் போன்று  தோன்றியிருக்க வேண்டும். கைதட்டி ரசித்தனர். வயது என்னைத் தடுத்தது. எனக்கான பணியைத் தொடர்ந்தேன்.

மூன்று சுற்றுகள் முடிந்தன. இப்பொழுது அப்பெண்ணைக் காணவில்லை. வேடிக்கை பார்த்தவர்களில் ஒருத்தி சக்கராசனத்திற்கு முயன்றாள். ஆரம்பத்தில் இயலவில்லை. சில முறை கீழே விழுந்தவள், நேராகப் படுத்து மேனியை மேல்நோக்கித் தூக்கினாள். கால்களைப் பின்னந்தலைக்கு நெருக்க வில்லொன்று உருப்பெற்றது. கைகள் துணை கொண்டு தலையை உயர்த்த யோகாசனம் முழுமையடைந்தது. இங்கு வான்கோழிகள் என்று எதுவுமில்லை. கான மயில்கள் மட்டுமே உள்ளன.

பட உதவி: ChatGPT