எனது வாட்ஸ்அப் குழு ஒன்றில் நடந்த குறுங்கதை (நுண்கதை)ப் பயிற்சிக்கான போட்டியில் நான் எழுதிய சில கதைகள் இங்கே பதிவேற்றுகிறேன். விதிமுறைகள்: மொத்தக் கதையும் 111 வார்த்தைகளுக்குள் முடிய வேண்டும்; புனைவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பதம் மீண்டும் இடம்பெறக் கூடாது; இவ்விதி நான், நீ, அவன், இவன், வந்தான், போனான், அது, இது, அப்பா, அம்மா, காலை, மாலை தொடங்கி அனைத்துக்கும் பொருந்தும். இது முதல் கதை. (படங்கள் உதவி: ChatGPT)

விடுமுறையில் பொழுதைப் போக்கியதே தெருவில் தான். இரண்டு நாட்களாகக் ‘குரங்குப் பெடலுக்குப்’ பின்பான, சட்டகம் தாண்டிக் கால் போட்டு ஓட்டத் தொடங்கியிருந்தேன்.
அவ்வழியில் எப்பொழுதாவது ஒரு கார் அல்லது பேருந்து செல்லும். வீதி, வீட்டிலிருந்து ஐநூறு மீட்டர்கள் தொலைவில் நெடுஞ்சாலையுடன் இணையும். சற்று உயரமான அவ்விடத்தில் போக்குவரத்து அதிகம். அதனால் அப்பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது உத்தரவு.
கூடப் படிப்பவர்களில், முதலில் சைக்கிள் இயக்கக் கற்றுக்கொண்டவன் என்ற பெருமை. கர்வம் தன் கடமையைச் செய்தது. மேட்டில் ஏறியாயிற்று. மூச்சுத் திணறியது. கைப்பிடி தடுமாறியது. பின்னாலிருந்து கேட்ட லாரியின் சத்தம் எனது ஈருருளியை வலப்புறம் ஒதுக்கியது. எதிரில் வந்த மிதிவண்டியுடன் மோதியதில் தூக்கியெறியப்பட்டேன். எனக்குப் பெரிதாகக் காயம் ஒன்றுமில்லை. ஆனால் அம்மனிதரின் கைப் பெருவிரல் கிழிந்து ரத்தம் கொட்டியது.
கூடிய கூட்டத்திற்கு நான் யாரெனத் தெரிந்தது. தாக்க வந்தவரைத் தடுத்தவர்கள், “எங்கூரு தர்மகத்தா பேரனையே அடிக்கிறயா?” என அந்த நபரைச் சாத்தினார்கள். என்னை அங்கிருந்து அனுப்பி விட்டார்கள். பாவம் அவருக்குத்தான் உதை பலமாக விழுந்தது.