மிதிவண்டி நாட்கள்-3: வசவு

நுண்கதை

நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்கியவன், இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். சைக்கிள் கைப்பிடியில் பக்கத்திற்கு ஒரு மூட்டையாக சர்க்கரை, பருப்பு, பின்னால் கேரியரில் மண்ணெண்ணெய். என்னுடைய சக்திக்கு மீறி ஏற்றப்பட்டிருந்தது. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களுக்கு இடையில் ஓட்ட முடியாது என்பதை உணர்ந்தவன் குறுக்குச்சந்து வழியாக வந்தேன். (பட உதவி: Firefly_Gemini Flash)

அடுத்தது இரண்டாவது திருப்பம், வீட்டையடைய மேலும் சில உள்ளன. திடீரென ஒருவர், மிதிவண்டியில் தவறான திசையிலிருந்து திரும்பினார். வயது ஐம்பத்தைந்தைத் தாண்டியிருக்கும்.

எதிர்பாராமல் நிகழ்ந்ததால், நான் வண்டியை தட்டுத்தடுமாறி நிறுத்தினேன். புதுப்பழக்கம், சிரமப்பட வேண்டியதாயிற்று. கிருஷ்ணாயில் டின்னின் மூடி திறந்து, முதுகை நனைத்திருந்தது. இவ்வளவு நடந்தும் இருவரும் மோதிக்கொள்ளவில்லை.

இருந்தும் முன்னாலிருந்தவர் தமிழில் எத்தனை கெட்டவார்த்தைகள் உள்ளனவோ அத்தனையும் சொல்லிக் கத்தினார். சிறுவயது. முகத்தில் கண்ணீர் வழிந்தது. அடித்து விடுவாரோ? அஞ்சினேன். நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நேரவில்லை.

எங்கோ கொட்டுச் சத்தம் கேட்டது. நண்பன், அம்மனிதரின் பெயரைக் குறிப்பிட்டு ‘போய்விட்டார்’ என்றான். காலம் ‘பைக் நாட்களாக’ மாறலாம், நா வடு அழிந்திடுமோ?