இரண்டு தினங்களாக திருமண மண்டபம், வீடு என்பதாக சுற்றிக் கொண்டிருந்தான். சில மணி நேரத்தில் வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பமாகிவிடும். அருகில் தங்கியிருந்த விடுதிக்கு உடைமாற்றச் சென்றான். குடும்பத்தினர் தயாராகி அவனுக்காக எதிர்பார்த்திருந்தனர். வியர்த்து, முகம் கருத்து வந்தவனைக் கண்ட மனைவி “ஆயத்தமாகி வாருங்கள். காத்திருக்கிறோம்” என்றாள். (பட உதவி: Firefly_Gemini Flash)

குளித்துத் துணி உடுத்துவதற்குள் மாப்பிள்ளை அழைப்பிற்கு தயார், சீக்கிரம் வரவும் என்று அழைப்பு கிட்டியது. புத்தாடை புனைந்தாயிற்று. நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாக வாங்கிய, ஒருமுறை கூட உபயோகிக்காத பாதக்குறடுகள் ஏங்கியிருந்தன. கையிலெடுக்கவும் மீண்டும் தகவல். இதற்குமேல் தாமதிக்க கூடாது எனக் கிளம்பினான்.
பார்க்கிங்கில் காரை நிறுத்துவதற்குள் மணமகன் ஊர்வலம் வந்தடைந்திருந்தது. காலணிகளை ஒருவாறாக மாட்டிக்கொண்டு முன்வாசலுக்கு ஓடினான். அவ்விடத்தை நெருங்குவதற்கு சிறிது முன்னாள், காலில் வித்தியாசமாக உணர்ந்தான். பாதங்களைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
பாதுகை ஒன்றின் அடிப்பாகம் கழன்று தொங்கியது. மற்றதில் மொத்தமும் காணாமல் போயிருந்தது. நிலைமையை உணர்ந்த துணைவி சிரிப்பதா, திட்டுவதா, புரியாமல் தவித்தாள். “உடனடியா க்ராக்ஸவே போடுங்க,” உத்தரவிட்டாள். அணிந்திருந்த ஆடைக்கும் அதற்கும் எந்த ரத்த பந்தமும் இல்லை.