குருவிக்கூடு

நுண்கதை

கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றிலிருந்து எட்டிற்கும் இருபதிற்கும் மீண்டும் இரண்டிற்கும் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு அச்சத்தம் கவனத்தை ஈர்த்தது.

பந்தல், குருவிக் குடும்பத்திற்கு உள்வாடகை விட்டிருந்தது. ஆங்கிலப் பாடத்திலிருந்த ராபின்தான் வாயிலில் கூடு கட்டியிருந்தது. சின்னஞ்சிறு அலகையும் வெள்ளைத் தலையையும் காட்டிக்கொண்டிருந்த அது அவ்வப்பொழுது ஆரஞ்சு உடலையும் வெளிப்படுத்தியது.

பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் பார்ப்பான். ஒருநாள் அக்குடம்பையின் இடைவெளியில் காயாம்பூ வர்ண முட்டையொன்று தென்பட்டது. நாமில்லாத பொழுதில் கடவுளின் இல்லத்திலிருந்து வாங்கி வந்திருக்குமென்று மகிழ்ச்சியடைந்தான்.

அன்று வீட்டிற்குள்ளிருந்து பழனி மாமாவின் குரல் கேட்டது. இனிப்புப் பண்டமான பாதுஷாவிற்கு அடுத்து உலகில் பிடிக்காத ஜீவன் இவர்தான். அவர் வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகும் கன்னங்கள் வலிக்கும்.

வெளியிலேயே அமர்ந்து கொண்டான். நண்பனைக் காணவில்லை.

உட்புறமிருந்து வந்தவர், “ஏன்றா ஊட்டுக்குள்ள வல்ல, இதென்னடா புதுசா இருக்கு”

மேலும் இரு தினங்கள் வேதனையைத் தாங்க வேண்டும்.

“டேய் இவையெல்லா வாசல்ல இருக்கக்கூடாது” தடுத்தும் கேளாமல் கூட்டை எட்டிப் பிடித்திழுத்தார். நீல நிறக் கற்களின் மத்தியில், குட்டி, “மஞ்சள் ஆக்டோபஸ்” தரையில் படுத்திருந்தது.

பட உதவி: ChatGPT