அது ஒரு திங்கட்கிழமை

நுண்கதை

நான்கு வருடங்களாகத்தான் நிம்மதியாக வாழ்கிறேன். அதுவும் இந்த IT நிறுவனத்தில் இணைந்த பிறகு. அதிகாலையிலேயே செல்பேசி அலறியது. யாரென்று பார்த்தால் முன்பு பணியாற்றிய தீயணைப்புத்துறையிலிருந்து நண்பன். தவிர்த்தேன். தொடர்ந்த அழைப்புக்குப் பதிலளிக்காமலிருக்க முடியவில்லை. ஏற்றேன். சாதாரணமாகப் பேசியவன் அழத்  தொடங்கினான். உதவிக்கு ஆட்கள் தேவை, உடனடியாக வாவென்று கூப்பிட்டான். தட்டமுடியவில்லை. கல்ப்பாக்கம் போனேன்.

அங்கே அக்குடியிருப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வீடெது வழித்தடமெதுவென்றே தெரியவில்லை. இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கினேன். ஆரம்பத்தில் முழங்காலளவு இருந்தது. சடக்கென இடறியது. ஏதோ குழிக்குள் புதைந்தேன். அது சாதாரண நீர் இல்லை. செஞ்சாந்துச் சேறு.

கால் ஊன்றிய இடம் தரையல்ல. எதன் மீதோ நின்றிருக்கிறேன். குனிவது மிகக்கடினம், ஆனாலும் முயன்றேன். பெரும் போராட்டத்திற்குப் பின் எடுத்தது ஒரு குழந்தை. அன்று கண்ணன் மண்ணைத் தின்று உலகைக்காட்டினான் யசோதாவிற்கு. இன்று இவன் வாயில் அடைத்திருப்பது எனக்கு எதைக்காட்டவோ? மறுமுறை கைகளில் பட்டது உடலொன்று. சர்வநிச்சயமாய்ப்  பெண்ணென்றுணர்ந்தேன். தூக்கவில்லை. சுனாமி தன் பசிக்கு உயிர் மட்டும் போதாதென்று அவள் உடையையும் பறித்துச் சென்றிருந்தது.

பட உதவி: ChatGPT