முதல் பயணம்

நுண்கதை

வானில் தன்னை சமன்படுத்திக்கொண்ட ஊர்தி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  விமானி அவரது  வாகனம் பறக்கும் உயரம், வேகம், இன்னபிற சொல்லவேண்டிய அனைத்தையும் கூறி முடித்தார்.

பணிப்பெண்ணொருத்தி தட்டில் உணவைக் கொண்டுவந்து கொடுத்தாள். இருக்கைப்பட்டையைக் கழட்டிக் கொள்ளுங்கள் என்றாள்.

முதல் பிரயாணம். விமானங்களை ஐகான், குருவி, வல்லூறு போன்ற அளவுகளில் பார்த்தவன், அதனுள் ஏறிச் செல்வான் என நினைத்ததே இல்லை. மேகக்கூட்டம் காலுக்கு அடியிலிருந்தது. இறங்குமிடம் நெருங்கியது.

முதலில் ஒரு செல்லத் தடுமாற்றம். சிலநிமிடங்களுக்குப் பின்னர் அதுவே சற்றுப் பெரிதானது. இடப்பக்கம் சாய்ந்ததில் கையிலிருந்த குடுவையிலிருந்து பானம் தொடையில் சூடாகக் கொட்டியது. ஆட்டம் அதிகமானது. ஓட்டுபவர், “வான்வெளியில் சிறு தடங்கல். சமாளித்துவிட்டோம்.” என்பதாக அறிவித்தார்.

சிறிது அமைதியான பயணம். திடுக்கென வானூர்தி அதன் நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கியது.  பாதங்களிலிருந்து ரத்தம் தலைக்கேறியது.

மீண்டும் வலவனின் எச்சரிக்கை, “நாம் மிகக் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியிருக்கிறோம். சூழல் சவாலாக  உள்ளது. பாதுகாப்புப்பட்டையை அணியுங்கள்.”

கடும் முயற்சிக்குப் பிறகு விசும்பூர்தி மெதுவாக இலங்கையில் தரையிறங்கியது.