நான் நன்றாக சைக்கிள் ஓட்டியதில் கோவிந்துவிற்குப் பொறாமை. அவன் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருந்தான். தினமும், பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்பான்.

(பட உதவி: ChatGPT)
எப்பொழுதும் முடியாதென தவிர்த்துவிடுவேன். அன்று அறியாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். மறுதினம் முற்பகல் பதினோரு மணிக்கு போட்டி என்பது உறுதியானது.
பாதை, அவர்கள் இல்லத்திலிருந்து கவையகாளியம்மன் கோவில் வரை செல்ல வேண்டும். ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவு.
அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன். நண்பனின் வாகனம் சுத்தமாகத் துடைக்கப்பட்டுப் பளிச்சென்று மின்னிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வெளியே காத்திருந்தான்.
தோழனின் எதிர்பார்ப்பு ஆரம்பமாகியது. குரங்குப் பெடல் ஆரம்பத்தில் கைகொடுத்தது. எளிதாகக் கிளம்பிவிட்டான். காலை மாற்றிப்போட்டு மிதிக்கட்டையை அழுத்துவதற்குள் சற்று தூரம் கடந்துவிட்டான்.
எதிரிலிருந்த குழிக்குத் தடுமாறியவனை சுலபமாக வென்றேன். பின்னால் வருபவனின் பதற்றம் அதிகரித்திருந்தது. முன்னிருந்த வளைவுக்காக வேகத்தைக் குறைக்க, தொடர்ந்தவனின் மிதிவண்டி என்னுடையதுடன் மோதியது.
நியூட்டனின் இரண்டாவது, மூன்றாவது விதிகள் ஒருசேர உதவிக்கு வந்தன. திரும்பிப் பார்த்தால், இடித்தவன் கீழே விழுந்து கிடந்தான். வீதியின் புழுதி மொத்தமும் முகத்தில் அப்பியிருந்தது.