செருப்பு

நுண்கதை

யாரும் திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிடுவார்கள், பின்னால் ரமேசு வருகிறானென்று. அவனது சைக்கிளில் பெல்லே கிடையாது. பெடலிலிருந்து வரும் சத்தமே  முன்னால் செல்பவர்களை விலக்கிவிடும். சமையலில் மீந்த எண்ணெய்யை விட்டால் ஒசை வராது என்று கூறினார்கள். ஆனால் வீட்டில் பூரி செய்ததே இல்லை.

தினமும் பிள்ளையாரைப் பார்க்க கோவிலுக்கு வந்துவிடுவான். இருப்பினும் அவனைப் பார்க்கத்தான் அவர் வருவதேயில்லை.

மிதிவண்டியுடன் போட்டி போடும் செருப்பை அணிந்திருந்தான். அது தன் வெள்ளை நிறத்தை இழந்து வெகு நாட்களாகிறது. பின்புற ஓரத்திலிருந்து மூன்றாம்பிறை எட்டிப்பார்க்கும். மணலில் நடக்கும்பொழுது அதன் சுவடுடன் சிறு பின்னூசியின் அச்சும் சேர்ந்தே விழும்.

ஆலயத்தின் வாசலில் ஓரமாக வண்டியை நிறுத்தியவன் எவரும் தொடுவதற்கு எளிதாக முன்வாசலில் மிதியடியை விட்டுச்சென்றான். வழக்கம்போல் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு முறைகளை முடித்தவன் வெளியே வந்தான். காலணிகளைத் தொடுத்தவன் ஈருருளி ஓட்டிச்சென்றான்.

இன்றும் அவன் கஷ்டத்தை  யாரும் துடைக்கவில்லை.

பட உதவி: ChatGPT