வாசிப்பு

நுண்கதை

எதிர்பார்த்தது போலவே ஜன்னலோர சீட்டு கிடைத்தது. எதிரில் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி அமர்ந்திருந்தாள். கையில் பெரியதொரு தலையணைப் புத்தகம்  வைத்திருந்தாள். பாதி முடிக்கப்பட்டிருந்தது.

ஏதோவொரு கிராமத்தின் மத்தியில் தொடர்வண்டி நின்றது. அடுத்திருந்த நடைபாதையில் இரண்டு பெண்கள் முக்காடிட்டு உட்காரந்திருந்தார்கள். ஆண்கள் குத்துக்காலிட்டிருந்தார்கள். வடக்கிலிருந்து வந்தவர்களாக இருக்கும். பயணம் தொடர்ந்தது.

புதிய பாலமொன்றைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தாண்டியதும் பெருநகரச் சந்திப்பின் பிளாட்பாரத்திற்குள் வண்டி நுழைந்தது. டீ, காபி, ரயில்நிலைய அறிவிப்பாளினியின் “வண்டியெண் 6032” எதுவும் அவள் காதில் விழவில்லை.

தொடருந்து கிளம்பியது. அடுத்தடுத்து ஓடிய மின்கம்பங்கள் சலிப்பைத் தந்தன. எத்தனை நேரம் தூங்கியிருப்பானென்று தெரியவில்லை. தடக்கென்ற நின்ற புகைவண்டியின் அதிர்வு அவனை எழுப்பியது. அருகில் விசாரித்ததில் கிராசிங்காம். அரைமணி கழித்தே கிளம்பும் என்றார்.

தூரத்தே மங்கையொருத்தி கையிலிருந்த நீண்டதொரு குச்சிக்குத் துணையாக நின்றிருந்தாள். அருகில் இரண்டு ஆடுகளும் தோளிலொரு குட்டியும் இருந்தது. அங்கிருந்த சிறுவர்களின் கிரிக்கெட் கூச்சல் அவன் வரை கேட்டது.

தொடரி புறப்பட்டது. ரயில் பயணத்தின் பக்கங்களை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தான்.

பட உதவி: ChatGPT