
வானத்தைப் பார்த்த சின்ராசுவுக்கு லேசாக வயிறு கலக்கியது. இரண்டு நாட்களாக அறுவடை செய்த தானியங்களை டிராக்டரில் அப்போதுதான் ஏற்றி முடித்திருந்தார். மாலை நேரத்தின் ஆரம்ப இருட்டை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்த மேகங்கள், எப்பொழுது வேண்டுமானாலும் உன் மீது உடைந்து விழுவோம் என்று பயமுறுத்தின. காலையில் கேட்ட வானிலை அறிக்கைப் பொய்யாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபோது, அவரது உதடுகள் உலர்ந்தன. இன்னும் ஒரு மணிநேரம் கிடைத்தால், சந்தையின் குடோனில் சரக்கை இறக்கிவிடலாம். ஆனால்… மழைக்கும் அவருக்கும் அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் யார் முந்துவார்கள் என்பது தெரியவில்லை.
டிராக்டரை ரோட்டிற்கு நகர்த்தியதும் தான், திடீரெனச் சின்ராசுவுக்கு நினைவு வந்தது, டிராக்டரில் டீசல் குறைவாக இருப்பதை! கந்தனை டீசல் வாங்க அனுப்பியதை அப்போதுதான் நினைவு கூர்ந்தார். இருக்கும் டீசலில் பாதித் தூரத்தைக் கடப்பது கூடச் சிரமமாக இருக்கும் என்பதை உணர்ந்தபோது, அவரது கைகள் நடுங்கின. வானம் இடி முழக்கத்துடன் இன்னும் கருப்பாகிக் கொண்டிருந்தது.
சந்தைக்குப் போகும் நெடுஞ்சாலையில் கந்தன், எப்படியும் தான் போகும் வழியில் எதிரில்தான் வந்தாக வேண்டும். அப்படி அவன் டீசல் வாங்கிக் கொண்டு எதிரே வந்தால் தப்பித்துவிடலாம். ஆனால் அவன் குறுக்குவழியாகத் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டால்? நடுவழியில் சிக்கிக்கொண்டு சீட்டியடிக்க வேண்டியதுதான்.
டிராக்டரில் சோள மூட்டைகளைச் சேர்த்துக் கட்டியிருந்த தார்பாலின், “எந்த நேரமும் உனக்கு வேலை வைக்கப்போகிறேன்” என்பதுபோல் காற்றில் அலைந்தாடிக் கொண்டிருந்தது. வடக்குத் திசையில் இடிமுழக்கம் அடிக்கடி கேட்பதைக் கவனித்த சின்ராசு, காலையில் வீட்டைவிட்டு வரும்போது சரசு, கருப்பண்ணசாமிக்கு நேர்ந்து கட்டிக் கொடுத்த முடிச்சை ஒருமுறை தொட்டுப் பார்த்து, மனத்தில் நினைத்துக் கொண்டார், “இனி கருப்பண்ணசாமிக்கும் மழைக்கும்தான் போட்டி. எனக்கும் மழைக்கும் இல்லை!” என்று கருப்பண்ணசாமி மீது முழுப் பொறுப்பையும் தள்ளிவிட்டு டிராக்டரை முன்னோக்கி ஓட்டினார்.
இருபது நிமிடம் கடந்திருந்தது. டிராக்டரை நிறுத்திக் கந்தனுக்காகக் காத்திருந்தால், மழை வென்றுவிடும். தொடர்ந்து ஓட்டினால், டீசல் தீர்ந்து டிராக்டர் நின்றுவிடும். அப்போதும் மழையே வெல்லும். இரு வழிகளிலும் தோல்விதான்.
அடுத்த இரண்டு வளைவுகளைத் தாண்டி, மூன்றாம் வளைவை ஒட்டியிருக்கும் ஒத்தையடிப் பாதையில் திரும்பினால் தோட்டத்துக்குச் செல்லும் குறுக்குவழி வந்துவிடும். சின்ராசு மூன்றாம் வளைவை நெருங்க நெருங்க…
டிராக்டர் என்ஜின் இரைச்சலை மிஞ்சி அவரது இதயத் துடிப்பின் ஓசைக் காதில் விழுந்தது. “கந்தன் ஒத்தையடிப் பாதையில் திரும்பியிருந்தா… அஞ்சு மாச பொலப்ப மழைக்குக் காவுகொடுக்க வேண்டியதுதா” என்று மனதில் எண்ணமிட்டபடியே டிராக்டரை ஒட்டிக்கொண்டிருந்தார்.
அந்த நிமிடத்தில்தான், முதல் மழைத்துளி அவரது தோள் பட்டையில் விழுந்தது. இரண்டாவது துளி மூக்கின் நுனியில் விழுந்து வடிந்தது. வானம் கனத்துக் கொண்டிருந்தது.
வீட்டில் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் மகளின் நினைவு அவரை இன்னும் பைத்தியம் பிடிக்கச் செய்தது. தானிய மூட்டைகளைச் சந்தையில் சேர்த்து, வியாபாரியிடமிருந்து பணத்தை வாங்கினால்தான் மறுநாள் காலை அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியும்.
டிராக்டர் இப்போது குன்னத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஊரின் முதல் வீடுகளின் விளக்குகள் மழையின் முன்னணிப் படையெடுப்பில் மங்கலாகத் தெரிந்தன.
அது, ஒரே ஒரு டீக்கடையும், மளிகை என்ற பெயரில் ஒரு சிறு கடையும் மட்டுமே முக்கியமான இடங்களாகக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய ஊர். மளிகைக் கடையைத் தாண்டும்போது, டீக்கடையின் முன்பாக அவரது டிவிஎஸ் மொபெட் நிற்பது போல் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.
ஆனால் கந்தன் அப்படி நின்று டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவன். இந்த எண்ணத்தோடு டிராக்டரின் வேகத்தை இன்னும் அதிகரித்தார்.
“அப்பா! அப்பா!”
“அண்ணே! சின்ராசு அண்ணே!”
பின்னால் இருந்து பல குரல்கள் கூப்பிட்டன.
திரும்பிப் பார்த்த சின்ராசு, கையில் டீசல் கேனோடு கந்தன் டிராக்டரை நோக்கி ஓடிவருவதைக் கண்டார். உடனே டிராக்டரை ரோட்டின் ஒரத்தில் நிறுத்தினார்.
“ஏன்றா, என்ன பார்த்தா மசக்கிருக்க மாறி இருக்குதா? ஊங்கிட்ட நா எனத்த சொன்னே? நீ எனத்த செஞ்சுட்டு இருக்கே? உனக்கு இப்போ டீதான் முக்கியமாப் போச்சோ?”
அவர் சிவந்த கண்களில் ரத்ததின் நிறம் தெரிந்தது. கன்னத் தசைகள் படபடக்க, உதடுகள் நடுங்கின. கந்தனின் முகத்தை ஊடுருவும் அந்தப் பார்வையில், ஐந்து மாத உழைப்பின் களைப்பும், அப்போதைய விரக்தியும் இணைந்திருந்தன.
அவர் பேச்சில் இருந்த சூட்டை உணர்ந்த கந்தன், “அப்பா, ஒரு நிமிசமுங்க! டீசல் வாங்கிட்டு வர வழியில மொபெட் பஞ்சராகிடுச்சுங்க. அதான் இவடத்தாலயே நிறுத்திட்டேன்ங்க. எப்படியும் நீங் இந்த வழியாத்தான் வருவிங்கன்னு காத்துக்கிட்டிருந்தேன்ங்க,” என்று விளக்கமளித்தவாறு டிராக்டருக்கு டீசலை ஊற்ற ஆரம்பித்தான்.
அதே நேரம், கடையிலிருந்து வெளியே வந்த இரண்டு ஆட்கள், “அண்ணே, என்ன இந்த மழையிலேயே சந்தைக்குக் கிளம்பிட்டீங்க? அதுமட்டுமில்லாம, மூட்டையெல்லா மழையிலே நனையற மாதிரியே கட்டிபோட்டீங்களே!” என்று கூறியபடி டிராக்டரின் மீது இருந்த தார்பாலினை இழுத்து மூட்டைகளை மூடி மீண்டும் கட்டினார்கள்.
மூட்டைகளை மூடியவர்களிடம், “வேறென்ன செய்யறது கண்ணு? பொலப்பு நாயிப் பொலப்பா இக்குது…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, சின்ராசுவின் கைகள் நடுங்கின. பயமும் குளிர்காற்றும் சேர்ந்து அவரை நடுங்க வைத்திருந்தன.
இதைக் கவனித்த கந்தன், “அப்பா, நீங்க உட்காருங்க” என்று சொல்லி அவனது தோளில் இருந்த துண்டினால், பக்க இருக்கையைச் சுத்தமாகத் துடைத்தான். அவரை அந்த இருக்கையில் அமரச் செய்தான். பிறகு தானே ஸ்டியரிங் வசம் அமர்ந்து வாகனத்தை ஓட்டத் தொடங்கினான்.
“ராசண்ணே, நாங்க வேணும்னா தொனைக்கு வரட்டுமுங்களா..?” என்று கேட்டார்கள் அந்த இருவர்.
“பரவாயில்லை கண்ணு, கந்த வந்துட்டா. நாங்க பாத்துக்கிறோம்,” என்று பதிலளித்த சின்ராசு, கந்தனிடம் டிராக்டரை ஓட்டச் சொன்னார்.
டீக்கடையிலிருந்து வேகமாகக் கிளம்பிய டிராக்டர் இன்னும் இரண்டு கிலோமீட்டர் முன்னேறி, வாய்க்கால் பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பாலத்தைக் கடந்தால், கிராமச் சாலையை விட்டு நெடுஞ்சாலையில் சேர்ந்துவிடலாம். அங்கிருந்து இருபது நிமிடத்தில் சந்தைபேட்டையை அடைந்து, மூட்டைகளை வியாபாரியிடம் கொடுத்துப் பணத்தை வாங்கிவிடலாம்.
ஆனால் பாலத்தை நெருங்க நெருங்க, மழையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
“ஏணுங், அந்த ஆலமரத்தடியில கொஞ்ச நேரம் நிறுத்திப் பார்க்கலாமுங்கலா? மல கொஞ்ச கொறஞ்சுது போலாங்கலா?” என்றான் கந்தன், தன் முகத்தில் மழை நீர் விழாமல் இருக்கும் வண்ணம் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த தாரப்பலினை இழுத்துவிட்டாவாறு.
ராசு மௌனமாக இருந்தார். அவரது கண்கள் மட்டும் பாலத்தையும், அதற்கப்பால் தெரிந்த நெடுஞ்சாலையையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.
கந்தனின் முகத்தில் வழிந்தோடிய மழைநீரைப் பார்த்த ராசு, “சரி புள்ளே, பொறவென்ன செய்யறது? இவடத்தாலயே நிப்பாட்டு. எப்படியு முன்னால கட்டிருக்கிற மூட்டக்குள்ள தண்ணி புகுந்திருக்கு. மீதியவாவது காப்பாத்தி எடுத்துட்டு போலாம்,” என்று கூறினார். அவரது குரலில் ஒரு சோகமான ஏற்பு தொனித்தது.
கந்தன் ராசுவின் கண்களைப் பார்த்தான். “நீங்க கவலைப்படுகிற அளவுக்குப் பெரிய பிரச்சனை ஒன்றும் ஆகிவிடல்லைங்க. மழை தணிஞ்சா பாக்கலாம்ங்க,” என்று சமாதானம் கூறினான்.
“அட ஆருடா இவ!” ராசு கடுமையாகக் கத்தினார். “ஏங்கவல இப்போ இந்த மழையப் பத்தியில்லடா! ஊட்ல நெரமாசக்காரி உங்கக்காவப் பத்தியும், அந்த வியாபாரியைப் பத்தியும்தான். அவ எப்பயுமே கடையைச் சீக்கிரமா சாத்தீட்டு ஓடிறுவான். இப்போ மழை வேற ஆரம்பிச்சுடுச்சு. அவங் கெளம்பிட்டா… நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வேணுங்கிர பணத்துக்கு நானெங்க போறது?” அவரது குரல் நடுங்கியது. குரலின் நடுக்கம் பயத்தாலா, அல்லது மழையின் குளிர்ச்சியாலா என்று பிரித்துணர முடியவில்லை.
அப்பாவின் கோபத்தைக் கண்ட கந்தன், வாய்த் திறக்காமல் அமைதியாகி நின்றான். மழையில் நனைந்துக் கூடு திரும்பிய பறவைகள், தங்கள் கூடுகளில் ஒதுங்கியிருந்தன. அவற்றின் ‘கீச் கீச்’ என்ற கீச்சொலிகள் முழு பகுதியையும் நிரப்பியிருந்தது.
மேற்குத் திசையில் ‘படார்!’ என்ற பெரும் இடியொலி வானைப் பிளந்தது. வெள்ளி நரம்புகள் போன்ற மின்னல் கீற்றுகள் பூமியைத் தாக்கின. ஒரு கணம் பளிச்சிட்ட வெளிச்சத்தில் எல்லாம் வெண்சுடராய் மாற, அவர்களின் கண்கள் தற்காலிகமாகக் குருடாயின.
இடியின் கொடூரச் சத்தத்தால் பறவைகள் பயந்தன. சிறிது நேரம் அடங்கியிருந்த அவை, பிறகு, ‘கிரீச்ச்!’ என்ற கூக்குரலோடு மீண்டும் கத்தின. அந்த இடமே ஒருவிதப் பயங்கரமான அமானுஷயத்திற்கு ஆட்பட்டது. காற்றில் கலந்தப் பறவைகளின் பதற்றம், மழையின் குளிரோடு கலந்தது.
ஆழ்ந்த மரக்கிளைகள் நெருக்கமாகப் படர்ந்து, டிராக்டருக்கு ஒரு வகையான பாதுகாப்பைத் தந்தன. ஆனால் காற்று மழைநீரை வீசியடிப்பதை மட்டும் தடுக்க முடியவில்லை. டீக்கடையில் இருந்தவர்கள் இழுத்துக் கட்டிய தார்பாலின் இதுவரை தானிய மூட்டைகளை நனையாமல் காத்திருந்தது.
வாய்க்கால் பாலத்தைத் தாண்டியவுடன், நெடுஞ்சாலையோரம் தெரிந்த அவரது வாய்க்கால் தோட்டம் நினைவுக்கு வந்தது. அந்த நிலம், அவரது அண்ணன் சில ஆண்டுகளுக்கு முன் ஏமாற்றிப் பறித்துக்கொண்ட நிலம். ஒரு காலத்தில் அவரது வியர்வையால் விளைந்த நன்செய்ப் பயிர்கள் நிறைந்திருந்த அந்த ஐந்து ஏக்கர் நிலம். இப்போது அது பிறரின் உடமையாகி விட்டிருந்தது. மழையின் குளிர்ச்சியைவிட, அந்த நினைவு அவரைக் கடுமையாக உறைக்கவே செய்தது.
மின்னலின் மெல்லிய வெளிச்சத்தில், ராசுவின் முகத்தைப் பார்த்த கந்தன், அவருடைய எண்ண ஓட்டத்தை உணர்ந்தான். இங்கே வண்டியை நிறுத்தியது தவறாகிவிட்டதோ? என்று உள்ளூரப் பதறினான்.
சின்ராசுவின் அப்பா தன் மகன்களுக்குத் தோட்டத்தைச் சரியாகவே பிரித்துக் கொடுத்திருந்தாலும், அவரின் படிப்பறிவின்மையும், அண்ணனின் சூழ்ச்சிகளும் சேர்ந்து, அவரது பங்கை இழக்கச் செய்திருந்தன. அதோடு மகளின் திருமணத்தில் ஏற்பட்ட கலவரங்கள், கடன்கள் என எல்லாமுமாகச் சேர்ந்து, சின்ராசு தன் பாகத்தை அண்ணனிடம் சொற்ப காசிற்கு எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்திருந்தது.
மகள் திருமணத்திற்குப் பிறகு, மீதியிருந்த காசில் சில மைல் தூரம் தள்ளி ஒரு வறண்ட பூமியை வாங்கினார். கிணறு தோண்டி, பயிர் செய்த முதல் வெள்ளாமை அது. அவர் படும் சிரமங்களைக் கண்ட கந்தன், தன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அவருடன் விவசாயத்துக்கு வந்திருந்தான்.
“எங்கே, அவனும் தன்னைப் போல படிப்பறிவில்லாமல் வாழ நேரிட்டுவிடுமோ?” என்று ராசுவுக்கு ஒரு பெரும் கவலையாக இருந்தது.
அரை மணி நேரம் கடந்திருந்தது. ராசுவின் வேதனை நிறைந்த பெருமூச்சு, வானத்தைத் தொட்டிருக்க வேண்டும். மழை மெதுவாகத் தன் கடுமையை இழந்து கொண்டிருந்தது.
ராசு வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். மேகங்கள் சிதறிக் கொண்டிருந்தன. “கண்ணு, வெட்டாப்பூ உடுது. வண்டிய வெரசலா ஓட்டு,” என்று கூறினார்.
அவரது குரலில் ஒரு துடிப்புத் திரும்பியிருந்தது. வானத்தின் தெளிவு, அவரது முகத்தில் ஒளி வீசுவது போல் தோன்றியது. கந்தன் ஸ்டியரிங்கை இறுகப் பிடித்தான். கிளம்பிய டிராக்டர் என்ஜின் சத்ததில் பறவைகளின் கீச்சொலிச் சத்தங்கள் மெல்ல மறைந்தன.
வாய்க்கால் பாலத்தைத் தாண்டிய டிராக்டர் நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. சின்ராசுவின் பழைய தோட்டத்தை நெருங்க நெருங்க, அவரது இதயத் துடிப்பு எல்லை மீறியது. கண்களில் நிழலாடிய எதிர்பார்ப்புகள், உண்மையின் முன் சிதறின.
அவர் எதிர்பார்த்தபடி அந்த நிலம் அப்போது வயல்வெளியாக இருக்கவில்லை. அவரது உழைப்பால் பண்பட்ட அந்த நன்செய் நிலம், எங்கும் கற்கள் நடப்பட்டுக் கரும்புக்காடு காங்ரீட் காடாக மாறுவதற்குத் தயாராக இருந்தது. முன்புறமிருந்த ஒர் ஏக்கர் நிலம் முழுவதும், பூமியிலிருந்து கிளம்பிய இரும்புக் கம்பிகள், பாம்புகள் போல் வளைந்து நீண்டிருந்தன.
“என்ன ஆச்சு.., இது..” என்று முணுமுணுத்தார் சின்ராசு. நெஞ்சில் பூத்த வேதனை, முகத்தில் ஒரு விகாரமான புன்னகையாக வெளிப்பட்டது. அவரது விரல்கள் இருக்கைக் கைப்பிடியை இறுகப் பிடித்தன. கைகளின் நரம்புகள் வெளியே தெரிய, உள்ளங்கைகள் வியர்வையில் நனைந்திருந்தன.
கந்தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். “என்னங்…?” என்று கேட்கும் குரலில் குழப்பம் தொனித்தது.
“ஒண்ணுமில்ல, புள்ளே,” சின்ராசு மெதுவாகச் சொன்னார். “நாம போராடினோம். அவனுக ஜெயிக்கிறதா நெனச்சு தோத்துட்டு இருக்காணுங்க. இப்ப என்ற வெசனொமெல்லா நம்ம சரக்க பத்தி மட்டும்தான். நீ யோட்டு.”
டிராக்டரின் பின்னால், தார்ப்பாலின் கீழ் மூடப்பட்டிருந்த தானிய மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்பதே இப்போது அவரது ஒரே நோக்கம். ஆனால் அவரது கண்கள் மட்டும் அந்த நிலத்தை விட்டு விலக மறுத்தன. ஒரு காலத்தில் அவரது குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய அந்த ஐந்து ஏக்கர், இப்போது வேற்றுவர்களின் வளர்ச்சித் திட்டத்தில் பலியாகிவிட்டிருந்தது.
மழைத்துளிகள் அவர் முகத்தில் விழுந்தன. ஒவ்வொரு துளியும் சின்ராசுவின் நினைவுகளில் ஒன்றைத் துடைத்தது. அவரது மனைவி முதல் மகள் பிரசவித்த போது அவர் அந்த வயலில் நின்று கொண்டிருந்தது. கந்தன் சிறுவனாக இருந்தபோது, அந்த நிலத்தின் விளிம்பில் உட்கார்ந்துப் பள்ளிப் பாடப் புத்தகம் படித்தது. அவரது அண்ணன் சிரித்த முகத்தோடு, வஞ்சனை எண்ணத்தோடு கையெழுத்துப் பத்திரத்தை நீட்டிய நாள் என ஒவ்வொன்றாக துடைத்தது.
“போகலாம்,” என்று கடினமான குரலில் சொன்னார் சின்ராசு. அவரது குரலில் இருந்த தீர்மானம், டிராக்டரின் எஞ்சின் சத்தத்தை மிஞ்சியது.
டிராக்டர் என்ஜினின் சத்தம் மட்டுமே அடுத்தப் பதினைந்து நிமிடங்களுக்குக் காற்றில் மிதந்தது. அவர்களின் கனத்த மௌனம், என்ஜினின் சத்தத்தை இன்னும் கடுமையாக்கியது போல் தோன்றியது. வேகத்தை அதிகரித்து ஓட்டியதால், மழை மீண்டும் பிடித்துக்கொள்ளும் முன்னதாகவே சந்தைப் பேட்டையை அடைந்திருந்தனர்.
சந்தை வாசலில் டிராக்டரை நிறுத்தியபோது, சின்ராசுவின் முகம் ஒரு விரக்தியான புன்னகையை உதிர்த்தது. அவர் எதிர்பார்த்தது போலவே வியாபாரி கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தான். குடோன் கதவில் தொங்கிய பூட்டு, அதன் கதவை மட்டுமல்லாமல் அவரது வாயையும் பூட்டியிருந்தது.
“ராசு, ஒரு பதினஞ்சு நிமிசம் முன்னாடி வந்திருக்க கூடாதா… அவன் இப்பத்தான் கடையையும் குடோனையும் பூட்டிட்டுப் போனான். அவன் புத்திய பத்திதான் உனக்குத் தெரியுமே!”
சின்ராசுவின் நண்பர் முத்து அருகில் வந்து நின்றார். அவரது குரலில் இரக்கமும், வருத்தமும் கலந்திருந்தன. சின்ராசு பதில் சொல்லவில்லை. அவரது புன்னகை மட்டும், வெயிலில் உலர்ந்த பூப் போல் உதிர்ந்தது.
கந்தனை நோக்கித் திரும்பிய ராசு, “சாமி, வியாபாரி அந்தக் கடகோடில இருக்கிறானான்னு ஒரு சுத்துப் பார்த்துட்டு வா. நானு இவடத்தாலெயே இருக்கே” என்று கூறினார். அவரது குரலில் ஒரு வித அழுத்தமான அமைதி இருந்தது. ஆனால் கந்தனால் அந்தக் கண்களில் மிதந்த வேதனையைப் பார்க்க முடிந்தது. ஐந்து மாத உழைப்பு, மழை, விரக்தி, இப்போது இந்தத் தோல்வி. எல்லாமே அந்த ஒரு பார்வையில் நிறைந்திருந்தது.
கந்தன் வியாபாரியைத் தேடிச் சுற்றியலைந்தான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடோனின் முன்பாகத் திரும்பியபோது, டிராக்டர் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தான். “அப்பா! அப்பா!” என்று கூச்சலிட்ட அவனது குரல் சந்தை வெளியில் மட்டுமின்றி, அவன் சொந்த இதயத்திலும் எதிரொலித்தது.
மின்னலின் மங்கிய வெளிச்சத்தில், அருகிலுள்ள ஒரு சந்திலிருந்து சின்ராசு வெளிவருவதைக் கண்டான் கந்தன். முகம் மலர்ந்த அவன், “அப்பா, எங்க போனிங்…?” என்று கேட்டான்.
ராசு பெரிய பதில் எதுவும் சொல்லவில்லை. “நீ வண்டில ஏறு. நாம கெளம்பணும்,” என்று மட்டும் கூறினார். அவர் குரலில் ஒரு புதிய தெம்பு தொனித்தது.
நண்பர் முத்துவை நோக்கிய ராசு. “ரொம்ப நன்றி முத்து. இந்த நேரத்துல உன்ற உதவி ரொம்பப் பெரிசாப் போச்சுப்பா,” என்று கூறினார். முத்துவின் பதிலுக்குக் காத்திராமல் அவரே டிராக்டரை உயிர்பித்தார்.
முத்து தலையைச் சோகமாக அசைத்தார். அவரது மௌனம் கந்தனுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது. ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கிறது என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது. ஆனால் என்னவென்று கேட்க அவனுக்குத் தைரியம் வரவில்லை.
மழையின் துளிகள் மீண்டும் தொடங்கின. சின்ராசுவின் கண்கள் முன்னே இருந்த சாலையை மட்டுமே உற்றுப் பார்த்தன. அதில் ஏதோ ஒரு புதிய உறுதி மின்னியது.
சந்தைப் பேட்டையை விட்டு வெளியேறியதும், டிராக்டருக்கு டீசல் நிரப்பி வீட்டை நோக்கி விரைந்தார். வாகனத்தின் வேகம் ஏற ஏற, மழையும் சேர்ந்தாற்போல் கொட்டத் தொடங்கியது. நீண்ட நேரம் நிலவிய அமைதியைக் கிழித்துக்கொண்டு கந்தன் குரல் எழுப்பினான்.
“அப்பா… ஊட்டுக்குதானுங்களே போறோம்? அக்காவ நாளைக்கு ஆஸ்பத்திரியில சேர்க்கணும்னு சொன்னிங்களே! இப்போ… இப்போ என்ன செய்யப் போறோமுங்க?”
ராசு கண்களை ரோட்டில் இருந்து கந்தனுக்குத் திருப்பினார். “பாத்துக்கலாங் கண்ணு,” என்று மட்டுமே சொல்லி மீண்டும் சாலையை நோக்கினார். அவர் முகத்தில் வழிந்த நீர் மழைநீரா, கண்ணீரா என்று கந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீடு வரை இருவரும் பேசவில்லை. கந்தன் சீட்டில் சுருண்டு உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் மட்டும் அவன் முகத்தை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தன, மழைநீரையும், கண்ணீரையும் ஒன்றாகச் சேர்த்து.
வெளியே, வீட்டின் முன் டிராக்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்ட சரசு, கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அது நடையா, ஓட்டமா என்று பிரித்துச் சொல்வதை விட, ஒரு தாயின் தவிப்பைக் காட்டும் மொத்த உருவம் என்று தான் சொல்ல வேண்டும். டிராக்டரில் சோளமூட்டைகள் அப்படியே நிறைந்து இருந்ததைப் பார்த்ததும், அவள் அடிவயிற்றில் ஒரு குளிர்ந்த கல் உருள்வதை உணர்ந்தாள்.
“நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு…” என்று தொடங்கிய அவள் குரல், காற்றில் மிதந்த மழைத்துளிகளால் சிதறுண்டது. ஒரு கைத் தாமாகவே அவள் நெஞ்சைத் தொட்டு அழுத்தித் தேய்த்தது. அந்தத் தொடுகை, உள்ளே மகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோளோ எனற தவிப்பில் இதயம் உடையாமல் அதைப் பாதுகாக்கவோ! எனத் தோன்றியது. மறுகை அவள் வாயை மூடியது.
டிராக்டரிலிருந்து இறங்கிய சின்ராசு டிராக்டரைப் பார்த்தவாறே அதனைத் தடவிக்கொடுத்துக் கொண்டே வந்தார். வந்தவர், தன் அண்ட்ராயரிலிருந்து கத்தைகளாக ரூபாய் நோட்டுக்கட்டுகள் இரண்டை எடுத்துச் சரசுவிடம் நீட்டினார். நீரில் நனைந்து ஒட்டியிருந்த அந்த நோட்டுகள், அவர் கைகளில் ஒரு தவிப்புடன் துடித்தன.
கந்தனுக்கு இப்போதுதான் சந்தையில் என்ன நடந்திருக்கும் என்ற விபரம் முழுமையாகப் புரிந்தது. மேற்கொண்டு எதுவும் பேசாமல், அவன் டிராக்டரை மேலும் மழையில் நனையாமல் இருக்க வீட்டை அடுத்திருந்த தகரக் கொட்டகைக்குள் நகர்த்தி நிறுத்தினான்.
வீட்டின் உள்ளே தயக்கத்துடன் நுழைந்து கொண்டிருந்த சின்ராசு, மீண்டும் மெல்ல வெளியே வந்தவர், “கண்ணு, கந்தா… நடுமூட்ட நனஞ்சிருக்காது. அடுத்த நடவுக்கு வெதச்சோள வேணு, எடுத்து வையு.”
பட உதவி; Chat GPT